பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

அயடீன் குறைபாடு வாரிசுகளை பாதிக்கும்.

பெண்களுக்கு டீன்ஏஜ் வயதில் ஏற்படுகின்ற அயடீன் குறைபாட்டால், எதிர்காலத்தில் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனில் பாடசாலை மாணவிகளுள் 70 வீதமானவர்களுக்கு அயடின் குறைபாடு இருக்கின்றமை தெரியவந்துள்ளது.
700 மாணவிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கருப்பையில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பிரதான காரணியாக இருப்பது அயடீன் ஆகும். இந்த அயடீன் குறைபாடு சம்பந்தப்பட்ட பெண்பிள்ளையின் சொந்த வாழ்வைப் பாதிக்காமல் விடலாம்.
ஆனால் அது நிச்சயம் அவர்களின் எதிர்கால வாரிசின் வாழ்வைப் பாதிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது உடலுக்குத் தேவைப்படும் ஒரு வகைக் கனிப்பொருள். தேவையான அளவு பால் அருந்துவதன் மூலம் இது கிடைக்கும்.
ஆனால் டீன்ஏஜ் பிள்ளைகள் பால் அருந்த மறுப்பது தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று ஆய்வாளர் மார்க் வெண்டர்பம்ப் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு கருப்பையில் அயடின் அவசியமாகின்றது. தாயின் தயரோயிட் செயற்பாடு குறைவாக இருந்தால் அது பிறக்கப்போகும் பிள்ளைகளின் விவேக மட்டத்தை 10 முதல் 15 புள்ளிகளால் குறைத்துவிடும்.
பிரிட்டிஷ் டீன்ஏஜ் பெண்களுள் 18 வீதமானவர்களுக்கு அயடின் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

25 ஏப்ரல் 2011

புருவங்கள் அழகாக இருக்க!

புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் உங்கள் கண்களில் அழகு கூடும், முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது!
புருவங்களை உங்கள் முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க சில குறிப்புகள்:
தேவையான பொருட்கள்:
டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற)
புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)
ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருதுவாக்கி, வலியை குறைக்க)
கண்ணாடி (அவசியம் தேவை)
சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய)
ஐப்ரோ பென்சில்
முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீளமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும்.
புருவங்கள் கண்களின் ஒரு முனையில் ஆரம்பித்து மறு முனையில் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத்தை வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆஸ்ட்ரிங்ஜென்ட்டை புருவத்தின் மேல் தடவவும்.
புருவத்தின் மேல் பக்கத்திலிருந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டுவீஜரால் எடுக்கவும்.
ஒரு பக்கம் புருவத்தை சரி செய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமைய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும்.
அடிக்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும்.
ஐபுரோ பென்சிலால் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப்பவும்.
கவனம்: மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர்க்கவும்.

22 ஏப்ரல் 2011

தொலைக்காட்சியால் பிள்ளைகளுக்கு இதய நோய் ஆபத்து!

தினமும் அதிகநேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம்பெறும் சாதனம் தொலைக்காட்சி.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி பார்ப்பதில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டுவிட்டு உணவு கொடுக்கின்றனர்.
விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.
3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி,ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது. இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.
அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்துவிட்டு, அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகள் நாள் ஒன்றிற்கு சுமார் 2 மணி நேரம் ஓடி, ஆடி விளையாட வேண்டும். இதனை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

16 ஏப்ரல் 2011

ஒற்றைத் தலைவலி!

தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல தெறிக்கும் தலைவலியை நம்மில் அநேகம் பேர் உணர்ந்திருக்க முடியும். தலைவலியில் பல விதங்கள் உண்டு. சாதாரண தலைவலி சில நிமிட நேரமே நீடிக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி பிரச்சினைக்குரிய ஒரு நோயாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றை தலைவலிக்கு காரணங்கள் பல உள்ளன. மூளையில் கொப்பளம், நாடாப்புழு மூளையைத்தாக்குதல், சைனஸ், பற்களில் பாதிப்பு போன்றவை இந்தவகை தலைவலி வருவதற்கு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் முறையற்ற வாழ்க்கை முறையே இந்த மைக்ரோன் ஒற்றைத்தலைவலி வர காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். யாருக்கு பாதிப்பு அதிகம்: மைக்ரேன் தலைவலி குறிப்பிட்ட தரப்பினரை அதிகமாக தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள்தான் இந்த பிரச்சினைக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கான மருந்து: ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் உள்ளன. மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம், யோகாசனம், ஆகிய பயிற்சிகள் மைக்ரேன் தலைவலியை கட்டுக்குள் வைக்கும். இவற்றைக் காட்டிலும், முறையான ஓய்வு, நேரத்திற்கு கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி போன்றவை ஒற்றைத்தலைவலியை அண்டவிடாமல் செய்துவிடும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும்.

13 ஏப்ரல் 2011

பலாப்பழத்தை அதிகம் உட்கொள்ளாதீர்கள்!

உணவே மருந்து. ஆனால் அதுவே அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறைகள்:
* பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.
* பலாப் பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.
* பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
* பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
* சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

09 ஏப்ரல் 2011

வாழைப்பழம் வாதத்தை தடுக்கும்!

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

07 ஏப்ரல் 2011

நல்லா வெங்காயம் சாப்பிடுங்க!

வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது. பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

04 ஏப்ரல் 2011

இது பெண்களுக்கு மிகவும் நல்ல உணவு!

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு: கீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன.எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை. முழு தானியங்கள்: முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம். கொட்டை பருப்புகள்: பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம். இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது. தயிர்: குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். நாவற்பழம்: பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான். மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது.இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.

02 ஏப்ரல் 2011

இது காதல் காலம்!

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள். தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள். தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள். காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது. ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம். எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது. வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி? டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.