மும்பையில் பள்ளிச் சிறுவன் ஒருவனின் வாயிலிருந்து சுமார் 232 பற்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் ஆஷிக் கவை(17). சமீபகாலமாக ஆஷிக்கின் வலது கன்னத்தின் உட்பகுதியில் வீக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் வலி அதிகமாகவே இது தொடர்பாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளான் ஆஷிக். ஆஷிக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது கடைவாய்ப் பல்லைப் பாதிக்கும் அளவில் ஒரு அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். எனவே, அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப் படுத்த அவர்கள் திட்டமிட்டனர். அறுவைச் சிகிச்சை... அதன் தொடர்ச்சியாக கடந்த திங்களன்று ஆஷிக்கிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடந்த அந்த அறுவைச் சிகிச்சையில் மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்திற்கு மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. கடுகு சைஸ் பற்கள்... வீக்கம் காணப்பட்ட பகுதியில் இருந்து சிறிய அளவிலான பற்கள் குவிந்து கிடந்துள்ளது. கடுகு அளவிலிருந்து சிறிய பளிங்கு கல் அளவிலான பலதரப்பட்ட அளவில் பற்கள் அந்த வீக்கத்தில் இருந்துள்ளன. 232 பற்கள் நீக்கம்... அறுவைச் சிகிச்சை மூலம் வீக்கமடைந்த இடத்திலிருந்து மொத்தம் 232 பற்களை நீக்கியதாக இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனையின் பல் மருத்துவப்பிரிவின் தலைவர் சுனந்தா திவாரே பல்வங்கர் தெரிவித்துள்ளார். அசாதாரணமான செயல்... இவை அனைத்தும் சாதாரண பற்கள் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருந்ததையும், ஒரே பல்லில் இருந்து வளர்ச்சி பெற்றதையும் குறிப்பிட்ட சுனந்தா, மருத்துவ நிகழ்வுகளில் இந்த செய்கை மிகவும் அசாதாரணமான ஒன்றாகும் என ஆச்சர்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி... மேலும், கட்டி போன்ற வளர்ச்சி பெற்ற ஒன்றும் அந்த வீக்கத்தில் இருந்து நீக்கப் பட்டுள்ளது. ஆஷிக்கின் வாயில் இது போன்ற பல் வளர்ச்சி ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர். வரலாறு படைக்குமா... வாயிலிருந்து இத்தனை எண்ணிக்கையில் பற்கள் நீக்கப்பட்ட சம்பவம் உலக சாதனையில் இடம் பிடிக்குமா என்று தற்போது மருத்துவர்கள் மருத்துவ வரலாறுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.