பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவரின் வயிறு 55 அங்குல சுற்றளவைக் கொண்டதாக இருந்தது. உலகில் கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வயிற்றை கொண்டிருந்த பெண்களில் ஒருவராக இவர் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.29 வயதான லாரா கார்பென்டர் பெக் எனும் இப்பெண், கடந்த வருடம் தனது முதலாவது குழந்தையை பிரசவித்தார்.
லாரா கர்ப்பமடைந்தவுடன் அவரின் எடை திடீரென அதிகரித்தது. அவர் நீரிழிவு நோயாளியாக இருந்தமையும் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சாதாரண கர்ப்பிணிப் பெண்கள் அணியும் ஆடைகளின் அளவு இவர்களுக்குப் பொருந்தாததால் மிகப் பெரிய ஆடையொன்றை அவர் அணிய வேண்டியிருந்தது.இறுதியில் 9 இறாத்தல் மற்றும் 5 அவுன்ஸ் (சுமார் 4 கிலோகிராம்) எடையுடைய பெண் குழந்தையை பிரசவித்தார். பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் ஜோர்ஜ் பிறந்தபோது இருந்ததைவிட இக்குழந்தை சுமார் ஒரு இறாத்தல் அதிக எடையுடையதாகும்.
"70 கிலோகிராமாக இருந்த எனது எடை கர்ப்பமடைந்து 36 ஆவது வாரத்தில் 114 கிலோகிராமாக அதிகரித்ததை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
இது எனது முதல் கர்ப்பம். எனவே என்னென்ன நடக்கலாம் என்பது குறித்து நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவ்வளவு பெரிய வயிற்றை கொண்டிருப்பது மிக சிரமமாக இருந்தது. உறங்குவதற்கும் கஷ்டப்பட்டேன்.
எனினும் இறுதியில் ஆரோக்கியமான மகள் பிறந்தமையால் நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என லாரா கூறுகிறார்.
தற்போது தனது எடை குறைந்துள்ள நிலையில், கர்ப்பகாலத்துக்கு முன்னர் தான் அணிந்த ஆடைகளை இப்போது மீண்டும் அணிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.