கர்ப்பிணி மனைவியை கொண்ட ஆண்கள் தாமும் கர்ப்பகால வேதனையை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நாப்பி தயாரிப்பு நிறுவனமொன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. 16 முதல் - 55 வயதுடைய 2000 த்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
உடலியல் மாற்றங்கள்:
தந்தையாகப் போகும் 23 வீத ஆண்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், உடல் உடலியல் மாற்றங்களை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 26 சதவீதமானோர் மனநிலை மாற்றங்களுக்குள்ளாகினர். 10 சதவீதமானோர் உணவு ஒவ்வாமைக்கு ஆளானார்கள். 6 சதவீதமானோர் வாந்தியெடுத்தார்கள். 3 சதவீதமானோர் கற்பனையான பிரசவ வலியை அனுபவித்தனர்.
மசக்கை உணர்வு:
மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சில கணவர்கள் அழுதல், மனநிலை மாற்றத்திற்குள்ளாதல், வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் கர்ப்ப வலிகளையும் அனுபவிக்கின்றனராம். இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்ட தந்தையாகப் போகும் ஆண்கள், ஊறுகாய், தக்காளி, தோடம்பழம் போன்ற புளி உணவுகளில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தையுடன் பிணைப்பு:
தந்தையாகப் போகும் ஆண்கள் தங்களது துணைவியின் கர்ப்பத்துடன் மிக நெருக்கமாகிவிடுவதுடன் ஆண்களில் பலர் கர்ப்பிணிகளைப் போன்று உணவு ஒவ்வாமை மற்றும் சுகவீனம் போன்ற கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உபாதைகளின் அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றனராம். தங்களது துணைவி கர்ப்பிணியாக இருக்கும்போது அதிக உணர்வுபூர்வமானவர்களாக விளங்குவதே இந்த ஆச்சரியமான நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் கூடுதலாக கர்ப்பிணிகளுக்கான வகுப்புகள் மற்றும் ஸ்கேன் சோதனைகளுக்கு செல்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் தாதியாக பணிபுரியும் மேரி ஸ்டீன் என்பவர், கர்ப்பத்தின் 12-14 ஆவது வாரங்களில் ஸ்கேன் சோதனைகளின்போது கணவர்களும் வருவதாகவும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான வகுப்புகளிலும் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 'இந்த விசயத்தில் ஆண்கள் இவ்வாறு ஈடுபடுவது குழந்தையுடனான அவர்களின் பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன் தமது துணைவியின் அனுபவங்கள் பற்றியும் அதிகம் அறிந்துகொள்கின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
நெருக்கம் அதிகரிப்பு:
தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது அப்பிள் மார்மைட் போன்ற உணவுகள் மீது விருப்பம் கொண்டதாக 32 வயதான மத்தியூ டோவ்னிங் என்பவர் கூறியுள்ளார். 'இந்த கர்ப்பத்திலும் பிரசவத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அது இருவரையும் மேலும் நெருக்கமாக்கியது. எனது உணர்வுகள் அவளின் உணர்வுகளுடன் மிக ஒத்திருப்பதை உணர்ந்தேன' என்கிறார் மத்தியூ.
அயல்நாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் தந்தையாகப் போகும் ஏராளமான ஆண்கள் மனைவியின் பிரசவ காலம் முடியும் வரை தாடி வைத்திருப்பதும், மனைவிக்காக பத்திய உணவு உண்பதும் நடைமுறையில் இருக்கிறது.உணர்வு பூர்வமான இந்த ஒத்துழைப்பு கர்ப்பிணிகளுக்கு கணவர் மேல் அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக