சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். மொத்தத்தில் கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. அழகுக்கு அழகு சேர்க்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
கருவளையம் போக்க:
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது மற்றும் உறக்கம் குறைவதாலும் கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இது கண்களின் அழகையே கெடுத்துவிடும். இதற்கு கண்களை அவ்வப்போது குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவுவதும், அடிக்கடி கண் பகுதியில் படும்படி தெளிப்பதும் நல்லது. அதிகமாக டிவி பார்ப்பதைத் தவிர்ப்பதோடு கண்களுக்குப் போதிய உறக்கம் அளித்தால் கருவளையம் மறையும். தொடர்ந்து புத்தகங்கள் படிப்பது நல்லது. கண்ணுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
கண்களுக்குப் பயிற்சி:
உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம். கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.
எட்டுமணி நேர தூக்கம்:
கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். கால்ஷியம், வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம்.
கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சு அல்லது உருளைக்கிழங்கு துண்டு அல்லது வெள்ளரி துண்டினை கண்களின் மீது வைக்கலாம். இளஞ்சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்க கண்களின் உலர் தன்மை மறைந்து உற்சாகம் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக கண்களின் அழகைப் பராமரிக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக