பக்கங்கள்

06 மார்ச் 2011

கர்ப்பகால வலிகள்!

கர்ப்பக் காலத்தில் பல்வேறு வலிகளை கர்ப்பிணிகள் அனுபவிக்க நேரிடும். முக்கியமாக மார்பக வலி, முதுகு வலி, தலைவலி, கால்களில் வலி ஆகியவற்றைக் கூறலாம்.
பெண்ணின் மார்பகம் கருத்தரித்த பிறகுதான் முழுமை அடைகிறது. அதில் நிறமாற்றமும் ஏற்படும். மார்பகப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும்.
மார்பகங்களைச் சுற்றி சின்னச் சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இது ஏதோ கட்டிகள் என பல பெண்கள் பயந்துவிடுகிறார்கள். இது மார்பக மாற்றத்தின் ஒரு பகுதி. எனவே பயப்படத் தேவையில்லை.
கரு வளரும்போது கூடவே வளரும் கருப்பையானது வளர்ந்து முன்னோக்கித் தள்ளுவதால் உடல் தனது சமநிலையை இழந்துவிடும். இதனால் முதுகு வலிக்கும். இவ்வாறே கருப்பையின் அழுத்தத்தால் இரத்த நாளங்கள் அமுக்கப்பட்டு கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கால்கள் வலிக்கும்.
குழந்தையின் தலைப்பகுதி பெரிதாகும் போது திரவங்கள் அதிகமாவதாலும், நாளங்கள் சுருங்குவதாலும் அங்கு இரத்தத் தேக்கம் உண்டாகி கால்கள் வீங்க ஆரம்பிக்கும். இதை வெரிக்கோஸ் வெயின் என்பார்கள்.
சருமத்தின் மேல் இந்த நாளங்கள் வீங்கிப் புடைத்துக் காணப்படும்போது அது நீலநிறமாகத் தோன்றும். இதனால் கால் வலி அதிகமாகும்.
இதைத் தவிர்ப்பதற்கு நீண்ட நேரம் நிற்காதிருத்தல், கால்களை உயர வைத்து ஓய்வெடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிரச்சனை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும். இல்லாவிட்டால் இரத்த நாள நிபுணரை அணுக வேண்டியிருக்கும்.
கர்ப்ப கால மாற்றங்கள் காரணமாக, கருவுக்கு சில பொருட்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஏதேனும் சில பொருட்களை முகர்ந்தாலோ, அருந்தினாலோ கூட தலைவலி வந்துவிடும். இவையெல்லாம் கர்ப்பக் காலத்தில் இயல்பாக வருபவையாகும்.
சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். இதற்குக் காரணம் கரு வளர்ச்சியின் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்துவதால் நுரையீரல் முழுமையாக விரிவடையாத நிலை உண்டாவது. ஆஸ்துமா நோய் இல்லாமல் இவ்வாறு இருப்பதும் இயல்பானதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக