பக்கங்கள்

02 ஜூலை 2010

நிச்சயிக்கப்பட்ட மணமகளுடன் உல்லாசமாக இருந்த மணமகன் திடீர் தலைமறைவு!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுடன் உல்லாசமாக இருந்து விட்டு, திருமணம் நடப்பதற்கு முன்னதாக தலைமறைவாகி விட்ட மணமகனை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் முத்துலட்சுமி (வயது 25). சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் `லேப் டெக்னீசியன்'ஆக வேலை செய்து வருகிறார். இதே மாவட்டம் பாலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வினோத்குமார் (25). முத்துலட்சுமி வேலை செய்யும் அதே ஆஸ்பத்திரியில் இவரும் `லேப் டெக்னீசியன்' ஆகவும், `எலெக்ட்ரீசியன்' ஆகவும் வேலை செய்து வருகிறார். இருவரும் ஆம்பூரில் `லேப் டெக்னீசியன்' படிக்கும்போதே பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர். இதனால், முத்துலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் வினோத்குமாரை வற்புறுத்தி வந்தார். ஆனால், திருமணம் செய்து கொள்ள வினோத்குமார் மறுத்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமி ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்குமாரையும், அவரது பெற்றோரையும், புகார் அளித்த முத்துலட்சுமி மற்றும் அவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முத்துலட்சுமியை திருமணம் செய்ய வினோத்குமார் சம்மதம் தெரிவித்தார். இரு வீட்டார் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் 2 பேருக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது முத்துலட்சுமியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு 5 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ஒரு சவரன் சங்கிலியும் போடுவதாக தெரிவித்தனர். அப்போது 02.07.10-ந் தேதி (இன்று) பாலூரில் வைத்து திருமணம் செய்ய தேதி குறிக்கப்பட்டது. 2 பேரின் வீட்டிலும் பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர். இதனால் முத்துலட்சுமி மகிழ்ச்சியுடன் தனது காதலனுடன் சகஜமாக பழகி, பேசி வந்தார். இதைப் பயன்படுத்தி, தனது காதலியும், வருங்கால மனைவியுமான முத்துலட்சுமியை வினோத்குமார் தனது வீட்டிற்கு வரவழைத்து, யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி முத்துலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். முத்துலட்சுமியும், தனது வருங்கால கணவர்தானே என்று கருதி, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விட்டார். கடந்த 17-ந்தேதி, வினோத்குமார் முத்துலட்சுமியின் வீட்டிற்கு சென்று திருமண பத்திரிகை கொடுத்தார். அன்று முதல் அவரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, தனது காதலனைத் தேடி பாலூருக்கு சென்றார். அப்போது வினோத்குமாரின் பெற்றோர், திருமணம் நடக்க வேண்டும் என்றால், கூடுதலாக 10 பவுன் நகை போட வேண்டும். மணமகனுக்கு மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு முத்துலட்சுமி குடும்பத்தினர், திருமணம் முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம், இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று கூறி விட்டனர். இதனிடையே, இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க வேண்டிய நிலையில் தலைமறைவான மணமகன் வினோத்குமார் என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் முத்துலட்சுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரின் தந்தை சுப்பிரமணி (55), தாய் ராகேல் (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணமகன் வினோத்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக