ஆந்திரா படவுலகில் போதை மருந்து புழக்கம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பிடிபட்ட நபரிடம் நடிகை த்ரிஷாவின் செல்போ எண்ணும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த செய்திகளால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமாகிளமென்ட் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் போதை பொருள் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுபாபு, பரத்வாஜ் இருவரும் கைதாகினர்.
இவர்கள் இருவரும் மட்டுமல்லாது ஆந்திர திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு போதை பொருள் ஆசாமியான விக்டரிடம் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவனுடைய செல்போனில் நிறைய நடிகர், நடிகைகளின் செல்போன் எண்கள் உள்ளன. அதில் த்ரிஷாவின் எண்ணும் உள்ளது.
இது பற்றிய செய்தியால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டு அறிக்கை வருமாறு:
'போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்.
நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.
போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்புபடுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்னைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்துவது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்.
எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்' என்று கூறியுள்ளார் த்ரிஷா.