தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது.
பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. சரிவிகித உணவுடன் கொழுப்பு சத்து குறைவான 3 டம்ளர் பால் குடித்து வருவதன் மூலம் தங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக