நடிகர் தனுஷ், ஜெனிலியா இணைந்து நடித்து வெளியாகியுள்ள உத்தமபுத்திரன் படத்தில் சிரிப்பு நடிகர் விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து பேசிய வசனத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனராம்.
தீபாவளிக்கு வெளியான படங்களில் ஒன்று உத்தமபுத்திரன். இப்படத்தில் கவுண்டர் சமூகத்தினர் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக நடிகர் விவேக் பேசியுள்ள வசனங்கள் தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கவுண்டர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் உ.தனியரசு தலைமையில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்சியின் கோவை மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் அக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்தை புதன்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து படத்தை நிறுத்தி வைக்குமாறு திரையரங்கங்களுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து படம் திரையிடப்பட்டிருந்த 6 தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பிட்ட வசனங்கள் உள்ள காட்சிகளை நீக்கிவிட்டு அத் திரைப்படத்தை திரையிடுவதாக, திரையரங்க உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் மாநகர அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில்,
எந்தவொரு சமூகத்தைப் பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது கண்டனத்துக்குரியது. இன்றைய சூழலில் திரைப்படங்கள் மக்களைச் சென்றடையக் கூடிய மிக முக்கியமான ஊடகமாக இருக்கிறது. இச்சூழலில், உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசும் வசனங்கள், கவுண்டர் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களது மனவேதனையை மாவட்ட ஆட்சியரிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் தெரியப்படுத்தினோம். ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதன்கிழமை காட்சிகள் நிறுத்தப்பட்டன.
நாங்கள் வலியுறுத்தியுள்ள வசனங்கள் அடங்கிய காட்சிகளை தவிர்த்து, திரையிடுவதாக திரையரங்க உரிமையாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
விவேக் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே தனது படங்களில் ஆபாச வசனங்களை அதிகம் பேசுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் ஒரு சமூகத்தினரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விவேக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக