பக்கங்கள்

26 நவம்பர் 2010

நந்தலாலா சொந்தக் கதையா?

நந்தலாலா படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல்தானே இது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே அதற்கு பதில் சொல்லாத மிஷ்கின், கோபமாக 'இந்தப் படம் ஒரிஜினல்... இதை காப்பி என்று நிரூபிக்க முடியாது' என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இடையில் நீண்ட நாட்கள் படம் வெளியாகாமல் இருந்தது.
இப்போது படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பிறகு வந்த மிஷ்கின், இது தன்னுடைய சொந்தக் கதை என்றும், தனது மூத்த சகோதரர் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பில் எடுத்ததாகவும் கூறினார்.
படம் குறித்த விமர்சனத்தை பிறகு பார்க்கலாம். ஆனால் இந்தப் படம் குறித்த சில உண்மைகளைப் பார்க்கலாம்.
நந்தலாலாவில் வரும் சில பாத்திரங்கள் தவிர, கதை, எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு முழுக்க முழுக்க ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நந்தலாலா கதைக்குப் போகும் முன், கிகுஜிரோவின் கதை என்னவென்பதைப் பார்த்துவிடுவோம்:
தகேஷி கிடானோ என்பவர் 1999-ம் ஆண்டு எடுத்த படம்தான் கிகுஜிரோ (Kikujiro). சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட படம். பட விழாக்களில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
ஒரு கோடை விடுமுறையில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். ஒரு புகைப்படமும் முகவரியும் மட்டுமே தாயின் ஆதாரமாகக் கிடைக்கிறது அவனுக்கு. அவனது பயணத்தில் உடன் சேர்ந்து கொள்கிறான் கிகுஜிரோ என்ற திருடன், ஆனால் சிறுவனுக்கு உதவும் நல்ல மனசுக்காரன்.
அவர்களது நெடுஞ்சாலைப் பயணம் தொடர்கிறது... வழியில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முதலில் முரண்பட்டு பின்னர் உதவுகிறார்கள். சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள். கிகுஜிரோவுக்கும் சிறுவனுக்கும் உதவுகிறார்கள்.
குறிப்பிட்ட ஊருக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு பக்கம் தாயின் வீட்டைத் தேடுகிறார்கள். கடைசியில் கிகுஜிரோ அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளோ புதிய கணவன், புதிய பெண் குழந்தை என செட்டிலாகிவிட்டிருக்கிறாள். கிகுஜிரோ வந்த விஷயத்தைச் சொன்னதும், தன் மகனைக் கூட்டி வந்து வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே என்று கெஞ்சுகிறாள்.
அங்கிருந்து கிளம்பும் கிகுஜிரோ, அந்த ஊரில் சிறுவன் தேடும் அம்மா இல்லை என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான். அப்போது கிகுஜிரோவுக்கு ஒரு ஹோமில் விடப்பட்டுள்ள தனது அம்மா நினைவுக்கு வருகிறாள்.
கடைசியில் தான் தேடும் அம்மா வரமாட்டாள் என்பதைப் புரிந்துகொள்கிறான் சிறுவன். அவனும் கி்குஜிரோவும் அவரவர் வழியில் பிரிகிறார்கள்...
-இப்போது மிஷ்கின் 'சுட்டுள்ள' நந்தலாலாவைப் பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக