ரசிகர்கள் திரைப்படங்களை ரசித்து மகிழலாம், ஆனால் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம், என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறினார்.
திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் தமிழ் பற்று கொண்டு ஆவேசமாக பேசினால் துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தலை முன் வைத்து தமிழர்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குகிறார்கள். இதனால் அண்ணன்- தம்பி உறவுகூட பிரிக்கப்படுகிறது.
போராட்ட உணர்வை இழந்ததால் கச்சத்தீவை இழந்தோம். சேது சமுத்திர திட்டத்தை ஒருமித்த குரலாக நம்மால் நிறைவேற்ற முடிய வில்லை. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை போல் தமிழக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
சினிமா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல. ரசிகர்கள் சினிமாவை ரசிக்கட்டும். ஆனால் பாலாபிஷேகமெல்லாம் வேண்டாம்.
காவிரிப் பிரச்சினை தீர, கருணாநிதி , ஜெயலலிதா, விஜய்காந்த் போன்ற தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி, பிரதமரைச் சந்தித்து பிரச்சினையை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றுதான் விவசாயிகளின் பிரச்சினைக்கு சரியான தீர்வு", என்றார்.
அப்போது, ஒரு நிருபர், நதிநீர் இணைப்புக்கு ரூ 1 கோடி தருவதாக ரஜினிகாந்த் கூறினாரே, அது என்ன ஆயிற்று? என்றார்.
உடனே தங்கர் பச்சான், "எதுவும் நடக்கப் போவதில்லை என்பதால் அவர் அமைதியாகிவிட்டாரோ என்னவோ..", என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக