சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே... தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் "ஏன், எதுக்கு, என்னாச்சி..." டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!
அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டவும் செய்வார், வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும்.
ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்). அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ஹை ஸ்டைல் காட்சிகள் அதில்).
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். ஆனால் சுஹாஸினியை சிடி வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.
"இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.
ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான்", என்றார் சுஹாசினி.
"அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா... மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்..." என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக