மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம் "மனிதனுக்கு பேச்சாற்றல் வந்த ரகசியம் குறித்து. அறிந்து கொள்ள முடியும்' என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பரிணாம வளர்ச்சிக்கு "மியூட்டேசன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரிணாம வளர்ச்சியின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஜப்பானை சேர்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் களமிறங்கினர். எலிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து ஆய்வு நடத்தினர். இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலிகளில் ஒன்று பறவைகள் போன்று குரல் எழுப்பியது தெரிந்தது. இதையடுத்து ஆய்வை, விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஆய்வுக் குழுவை சேர்ந்த, விஞ்ஞானி அரிக்குனி உச்சிமுரா கூறியதாவது:"பரிணாம வளர்ச்சிக்கு திடீர் மாற்றங்களே முக்கிய காரணி என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாற்று ஆய்வு உண்மை.
இதை அடிப்படையாக கொண்டு எலிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்கு, "எலிகள் பரிணாம வளர்ச்சித் திட்டம்' என்று பெயரிடப்பட்டது. எலிகளின் மரபணுக்களில் (டி.என்.ஏ.,) சில மாற்றங்களை செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, பறவைகள் போன்று குரல் எழுப்பியது. இது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலி, அதன் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து பாடும் குணாதிசயத்தை மரபணு மூலம் கடத்தும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
எனவே, அந்த எலியின் மரபணு தன்மையை அடிப்படையாக கொண்டு மேலும் 100 "பாடும்' எலிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களுக்கு பேச்சாற்றல் வந்ததன் ரகசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பறவைகளின் பாடும் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனித்து ஆய்வு நடக்கிறது. இவ்வாறு அரிக்குனி உச்சிமுரா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக